நிகழ்ச்சித் தொகுப்பு வழக்குரைஞர் சுமதி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அவ்வை நடராஜன், நல்லி குப்புசாமி செட்டியார், பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ், சோ ராமசாமி ஆகியோர். அவ்வை நடராஜன் எப்போதுமே தமிழில் வெளுத்து வாங்குவார். அன்று நரேந்திர மோடிக்குப் புரியவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ, தமிழிலும் பின்னர் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் கலக்கினார். நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசுவது அவருடைய சிறப்பு.
நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் நல்லி குப்புசாமி செட்டியாரைப் பார்த்திருக்கிறேன். புத்தகம் பற்றியே பெரும்பாலும் பேசுவார். இந்த நிகழ்ச்சியிலும் அப்படியே பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நூலை விட்டுவிட்டு, அவருடைய பிஸினெஸ் நூலைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆச்சரியம் & மோடிக்காக அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் சாதாரண இந்தியில் அசாதாரணமாகப் பேசினார். சூரத் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் மில் அதிபர்கள் மற்றும் சூரத் துணிகளின் மேன்மையைப் பற்றி ஒரு துணி வியாபாரி என்ற வகையில் பேசிச் சென்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நரேந்திர மோடி, இவருடைய இந்தப் பேச்சுக்கு ஒரு சபாஷ் போட்டார். காரணம், தான் ஒரு பக்கா பிஸினஸ் மேன்ஒ என்றும், தன் மாநில டெக்ஸ்டைல் பற்றி அவர் மார்க்கெட்டிங் செய்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டார்.பெரும்பாலான மேடைகளில் முக்கியப் பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு கொடுத்து கௌரவிப்பார்கள். அப்படிச் செய்யும்போது பெரும்பாலானவர்கள் அந்தப் பொன்னாடையை அப்படியே கசக்கி சுருட்டி அல்லது ஏனோதானோவென்று வைத்துக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் ஒன்றை கவனித்தேன். நல்லி தனக்குப் போடப்பட்ட பொன்னாடையை எவ்வித கூச்சமோ சங்கடமோ இல்லாமல், விரித்து, நன்கு உதறி, கலைக்கப்பட்ட மடிப்பிலேயே எந்தவித தொய்வும் இல்லாமல் மடித்து, எப்படி முதலில் கொண்டுவந்தார்களோ அப்படி மடிப்புக் குலையாமல் வைத்துக் கொண்டார். பழக்க தோஷம் என்பார்கள் சிலர். எனக்குப் பட்டது, தொழில் தர்மம்; திருந்தச் செய்யும் நேர்த்தி. வெற்றியாளனுக்குத் தேவையான பண்பு இது என்று எண்ணினேன்.
பி.எஸ்.ராகவன், நரேந்திர மோடியைப் பற்றி ஒரு விமர்சகர் எப்படி எழுதியிருந்தார் என்றும், பின்னர் அவரை நேரில் சந்தித்த போது, அவருடைய மனம் எப்படி மாறியது என்றும், அணுகுவதற்கு மிக எளியவர் என்பதை விளக்கி, குஜராத்தில் அவரை கடவுளுக்கு ஒப்பாக வணங்குகிறார்கள் சாமானியர்கள் என்றும் குறிப்பிட்டு அமர்ந்தார். மோடி உங்களால் முடியும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவர் குஜராத்தோடு நின்றுவிடக்கூடாது, இந்தியா முழுமைக்கும் சென்றுவர வேண்டும் என்றார் உணர்ச்சிவயப்பட்டு...
சோ ராமசாமி பேசிய போது சில சலசலப்பு ஏற்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அப்போது நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த சிலர்( எனக்குப் பின் வரிசையில் அமர்ந்திருந்த சிலர்...) எழுந்து நின்று கூச்சல் போட்டனர். நாளிதழ்களில் வெறும் சலசலப்பு என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.
உண்மையில் அரங்கினுள் என்னதான் நடந்தது?
எப்போதுமே நக்கல் பேச்சோடு தொடங்கும் சோ வின் பேச்சு, அன்றும் நக்கலோடுதான் தொடங்கியது. ஹிந்தியில் பேசிய நல்லியை கொஞ்சம் நக்கலடித்தார்... என்ன, நல்லி ரெண்டு மூணு வார்த்தைதான் திரும்பத்திரும்பச் சொன்னார். கர்ணா, முசே, அச்சா, பஹுத் இப்படி... இதை என்னாலும்தான் பேச முடியும். (இப்படிச் சொன்னபோது பார்வையாளர்கள் கைதட்டினர், விசில் அடித்தனர்). ஆனால், அவரைப் போல் முடியாது. அவர் பிஸினஸ் விஷயமாக பலரைப் பார்க்கிறவர். அவருக்கு பல மொழிகள் தெரிந்திருக்கலாம். எனக்கு அப்படி அல்ல, அதனால் தமிழிலும் ஆங்கிலத்திலுமே பேசுகிறேன். என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.மோடியை தமிழர்களுக்கு அதிகம் தன் பத்திரிகை மூலம் தெரியவைத்து, அவரை ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்த்தியதாக முன்னர் குறிப்பிட்ட ஒருவரின் பேச்சை அப்படியே சொல்லி, தான் ஒன்றும் மோடியை சூப்பர் ஸ்டாராக மாற்றவில்லை என்றும், சூப்பர் ஸ்டாரைத்தான் மோடியாக மாற்ற முயல்வதாகவும் சொன்னபோது பலத்த கைதட்டல்கள்.
இப்படி, மோடியைப் பற்றியும், அல்லயன்ஸ்ஸின் பதிப்புத் திறன் பற்றியும் பேசிக்கொண்டு வந்தவர், இந்த நூல் தமிழில் வந்திருப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இப்போது, பா.ஜ.கவுக்கு வேறு விடுதலைப்புலிகள் பேரில் புதிய பாசம் வந்திருக்கிறது... என்றார்.
சோவின் இந்த நக்கலுக்கு, பா.ஜ.தொண்டர்கள் தரப்பில் சலசலப்பு எழுந்தது. இலங்கைப் பிரச்னையை இங்கே பேசக்கூடாது என்று ஒரு சாரார். தமிழில் பேசு என்று ஒரு சாரார். நமது கட்சிக் கொள்கைக்கே முரணாகப் பேசுகிறார், கேட்டுக்கொண்டு சும்மா இருப்பதா என்று ஒருசிலர்... (இந்த நிகழ்ச்சி ஏதோ பா.ஜ.கட்சிக் கூட்டம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்!)... இந்த நிலையில் தங்கள் கட்சிக்காரர்களை சமாதானம் செய்ய பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசனும், தேசியச் செயலர் சு.திருநாவுக்கரசும் முன்னிருக்கையில் இருந்து எழுந்து வந்து, அரங்கு மத்திக்கு வந்தனர். ஒருவாறு கூட்டம் சலசலப்பு அடங்கியது. சோ பேசிக்கொண்டே இருந்தார். இலங்கையில் சண்டையை நிறுத்து என்று நாம் எப்படி கோரமுடியும். அது அவர்கள் உள்நாட்டு விவகாரம். நம் நாட்டில் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாகிஸ்தானோ மற்ற நாடுகளோ சொன்னால் நாம் சும்மாயிருப்போமா? நமக்கு ஒரு நியாயம் அவர்களுக்கு ஒரு நியாயமா என்று பேசிக்கொண்டே சென்றார்.அவ்வளவுதான், சோவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு அலை இன்னும் அதிகமானது. அதுவரை மரியாதையுடன் ங்கஒ போட்டு கூச்சல் போட்டவர்கள், இப்போது ஒருமைக்கு மாறினார்கள். இலங்கைப் பிரச்னையை காஷ்மீரோடு ஒப்பிடாதே... இத்தோடு பேச்சை நிறுத்து... அங்கே தினம் தினம் அப்பாவித் தமிழன் குண்டடிபட்டு சாகிறான். அவனும் சொகுசாக வாழும் காஷ்மீர் பயங்கரவாதியும் ஒன்றா? அடிப்படை தெரியாமல் இப்படி பேசாதே! என்று கோஷம் வலுத்தது.
ஆனாலும் சோ விடுவதாயில்லை. நீங்கள் என்னதான் எதிர்த்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன். இந்த கோஷத்துக்கெல்லாம் பயப்பட மாட்டேன். இதை இலங்கையின் வன்னி பகுதியில்கூட போய் நின்று இதையேதான் சொல்வேன். இதற்காக நான் பயப்படவில்லை... விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் ஜெயலலிதாதான் சரியான நபர். அவர் அன்றும் இன்றும் ஒரே முடிவில் உறுதியோடு இருக்கிறார்... இப்படிப் பேசிய போது, பார்வையாளர்கள் சிலர், ஜெயலலிதா ஒழிக!ஒ என்று எழுந்து நின்று கோஷம் போட, நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஒரு பக்கா அரசியல் கூட்டமாக களம் மாறிப்போனது. ஒருவாறு சோ பேச்சை நிறுத்திக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
(அவர் இப்படி எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்தவர்தான். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை. ஆனால் புதிது எதுவென்றால், பா.ஜ. தரப்பில் கட்சித் தொண்டர்கள் இடையில் எழுந்து எதிர்ப்பு கோஷம் போடுவது! ஒருமையில் திட்டுவது. பா.ஜ. கட்சியினருக்கு இப்போது புது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், இவர்கள் சொல்வதுபோல், இலங்கைப் பிரச்னைக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இரண்டுக்கும் முடிச்சு போடுவது தவறு என்றே மனதில் படுகிறது. இலங்கை குறித்து பேச நமக்கு உரிமை உண்டு; ஆனால், காஷ்மீரில் கைவைக்க பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்ற எண்ணம் எனக்கு. இது குறித்து நிறைய தகவல்களை சேகரித்து பின்னர் பிளாக்கில் இட எண்ணம் உண்டு).
பின்னர் பேசிய நரேந்திர மோடி, தன் மாநிலத்தை எவ்வாறு சூப்பர் பவர் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறேன் என்று பெருமிதம் பொங்கச் சொன்னார். அவருடைய பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மேலாண்மைத் துறை மாணவன் என்ற முறையில், அவருடைய மேலாண்மை உத்திகளை கவனிப்பதிலேயே இருந்தேன். இதயம் தொட்ட அவருடைய பேச்சிலிருந்து சில பகுதிகள்...நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சி எனக்கு இரண்டு நாட்கள் நீடித்திருந்தது. பாராட்டுகள் என்ன, மாலை மரியாதைகள் என்ன.... கனவுலகில் மிதக்கும் மகிழ்ச்சி. எல்லாம் இரண்டு நாட்கள்தான்! மூன்றாவது நாள் நான் நாற்காலியில் அமர்ந்து முதல் கோப்பைப் பார்த்தவுடனேயே எல்லாம் பொசுக்கெனப் போய்விட்டது. தேசிய அளவில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் மாநிலங்களின் வரிசையில் குஜராத் 20வது இடத்தில் இருந்தது. இந்த அறிக்கை என்னை இரவு முழுதும் தூங்க விடவில்லை. மோடி ஏதாவது செய் என்று என் உள்மனம் எனக்குக் கட்டளை இட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு முடிவு எடுத்தேன். இது போன்ற மேடைகளில் எனக்கு வரும் பரிசுப் பொருள்கள் இத்யாதிகளை அப்படியே அரசுக் கருவூலத்தில் சேர்த்து விடுவது; அதை ஏலம் விட்டு வரும் பணத்தில் சுயமாக கல்விக்கு என்று செலவழிப்பது.... ஆச்சர்யம், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சேர்ந்தது. அதை பெண் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழித்தேன்.
கிராமப் புறங்களில் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை நிற்றல் சதவீதம் அதிகமாக இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். இந்நிலையில் அரசாங்க அதிகாரிகளுடன் நானும் ஜூன் 16,17,18 தேதிகளில் ஒவ்வொரு வருடமும் மூன்று நாட்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுடன் நேருக்கு நேர் பேசி, அவர்களுடன் தங்கி, அவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். இந்தச் செயல் இப்போதும் நடைபெற்று வருகிறது. இதனால், 100 சதவீதம் பேரும் இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். 42 சதவீதமாக இருந்த பள்ளி இடைநிற்றல் இப்போது 2 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்துக்குள் அது 0% ஆக நிச்சயம் மாறும்.
(மோடி பெண் குழந்தைகள் கல்வி விஷயத்தில் காட்டிய அக்கறை போன்று அவருடைய ஆசிரியர்கள் மீதும் காட்டியிருக்கிறார் என்பதை அவருடைய பேச்சு வெளிப்படுத்தியது. கல்வி கற்பித்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்காவிட்டால், கற்ற கல்வியை எவ்விதத்திலும் பின்னாளில் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.)
செப்.5 ஆசிரியர் தினமென்று, முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நாம் கடைப்பிடிக்கிறோம். அந்நாளில் நான் என் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்ய எண்ணினேன். எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் பட்டியலிட்டு அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து வணங்கினேன். 33 ஆசிரியர்கள்... அவர்களில் ஒருவருக்கு வயது 95.
இப்படிப் பேசியவர், வழக்கம்போல் குஜராத் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதையும், 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் குறிப்பிட்டு, மாணவர்களின் படிப்புக்கு முக்கியத் தேவை இது என்றும் குறிப்பிட்டார். எங்கெல்லாமோ அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டுவர சிரமப்பட்ட காலம் போய், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திருப்பதாகச் சொல்லி, இப்படிச் செய்தாலே ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட முடியும் என்று குறிப்பிட்டார்.
(அதாவது, மாநிலத்துக்கான வளர்ச்சிப் பணிகளைத் திறம்படச் செய்துவிட்டு பின்னர் ஓட்டு கேட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மறைமுகச் செய்தி).
மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றாலே, பெங்களூரும் ஹைதராபாத்தும்தான் பேர் வாங்கியிருகிறது; ஆனால், குஜராத்தில் உள்ள கிராமங்களில்கூட பரவலாக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டு, எல்லா பள்ளிகளும் அகண்ட அலைவரிசை இணைப்பு மூலம் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது என்றார். வரும் 20ம் தேதி, குஜராத்தின் கிராமப் பள்ளி மாணவர்களுடன் செயற்கைக்கோள் வழி உரையாடப் போகிறாராம். இப்படி பிராட்பேண்ட் வசதி இருப்பதால், கல்வி வளர்ச்சி நூறு சதவீதம் சாத்தியம் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி போன்றவை பற்றி குறிப்பிடும்போது, இது மிகவும் முக்கியம். அரசு அலுவலகங்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் தூய்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பாக உள்ளது. இப்போதெல்லாம், அரசாங்க அலுவலகங்களுக்கு மனு கொடுக்கவோ படிவங்கள் வாங்கவோ அல்லது வேறு வேலையாக வருபவர்கள், அரசு அலுவலர்களால் லேசாக அலட்சியப்படுத்தப் படுவதாக உணர்ந்தாலே, சரி விடுங்க; நான் ஆன் லைனில் போய்க்கறேன் என்று பளிச்சென்று சொல்லி விடுவார்கள். இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை என்றார். குஜராத்தின் பொருளாதார மாநாடுகள் பற்றியும், அயல்நாட்டு முதலீட்டாளர்களை குஜராத்தின் பக்கம் திருப்பி, எப்படி அன்னிய முதலீடு அதிகளவில் குஜராத்தில் குவிய வைத்துள்ளோம் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொன்னார்.
முக்கியமாக, சென்னையில் நடந்த பொருளாதார மாநாட்டைப் பற்றிய விவரம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் போனதையும், முக்கியமான ஒரு மாநாட்டுக்குக் கொடுக்கும் மதிப்பு தமிழகத்தில் இவ்வளவுதானா என்பது தொனிக்கும் வகையிலும் பேசினார். இதில் நிறைய உண்மை உள்ளது.
கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிப் பேசியபோது, தாமதிக்கப்பட்ட நீதி, தடுக்கப்பட்ட நீதி என்பார்கள். இதன்மூலம் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீதிபதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன். முதலாவது, தயவுசெய்து உங்களுடைய பத்து நாள் விடுமுறையை ஆறு நாள்களாகக் குறைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீதிமன்றங்கள் காலை 11 மணிக்கு பதிலாக 10.30க்கு தொடங்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். மூன்றாவது, மாலை நேர கோர்ட்டுக்கு வழி ஏற்படுத்துங்கள். இதன் மூலம், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள் முதல், பகலில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் சாமானியர்கள் மாலை நேரங்களில் வழக்குகளை அணுக ஏதுவாக இருக்கும் என்றேன். இந்த ஐடியா நன்றாகவே பலனளித்தது. நீதிபதிகளின் ஒத்துழைப்பில், கிட்டத்தட்ட ஒரு கோடி வழக்குகள் தேக்கம் என்ற நிலையிலிருந்து 20 லட்சம் வழக்குகளாகக் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அது ஜீரோ என்ற நிலைக்கு நிச்சயம் மாறும்.
மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் என் மேல், நிர்வாக ரீதியாக எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. அது தொடர்பான எந்த வழக்குகளும் போடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், கேரளாவின் கம்யூனிஸ அரசாங்கத்தின் உறுப்பினர் என் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ரெட் தாலிபானிஸம் என்ற புதிய கொள்கை இங்கு பரவுவதையே காட்டுகிறது. ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. கேரள அரசால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது சிறப்பாக இயங்குகிறது என்று தெரியவந்தபோது, அதை நாமும் பின்பற்றினால் என்ன என்று எங்கள் மாநிலத்திலிருந்து இரண்டு இளம் அதிகாரிகளை அனுப்பி திட்டத்தை ஆய்வு செய்து நான் என் மாநிலத்தில் அமல்படுத்தினேன். நமக்கு நாட்டின் நலன்தான் முக்கியமே தவிர, அரசியல் காழ்ப்பு கூடாது. அரசியல் தீண்டாமை பெருகி வருவது கவலை அளிக்கிறது. நாடு முன்னேற அரசியல் தீண்டாமை கூடாது. தத்துவங்கள் ஒவ்வொருவருக்கிடையீல் வேறாக இருக்கலாம். ஆனால், அடிப்படை மாண்புகளை விட்டுவிட்டால், நாடு எப்படி முன்னேறும். நான் குஜராத்தை மட்டும் முன்னேறச் செய்ய நினைக்கவில்லை; குஜராத் உருவத்தில் இந்த நாட்டின் முன்னேற்றம் குறித்தே சிந்திக்கிறேன்
.முன்னர் பேசியவர்கள் ஒபாமா பற்றி குறிப்பிட்டார்கள். எங்கே நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தும் நாம் எடுத்துக்கொள்ள ஒரு செய்தி உண்டு. அமெரிக்க மக்கள் நமக்கு ஒரு நல்ல பாதையை காட்டியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியிருப்பதுதான். ஜார்ஜ் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன் பின் அவர் பின்வாசல் வழியே இப்போதும் நுழையப் பார்த்தார். ஆனால், மக்கள் தடுத்து நிறுத்தி, ஒபாமாவை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது நமக்கு அவர்கள் காட்டிய பாடம். மத்தியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக கட்சிகளின் ஆட்சி வரவேண்டும். பா.ஜ.க அப்படிப்பட்ட ஒரு கட்சி என்பதால், அதற்கு ஆதரவு பெருக வேண்டும்...
(கடைசியில் சொல்ல வந்ததைச் சொல்லி ஒருவாறு விடை பெற்றார். ஆனால், அவருடைய பல ஐடியாக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை மட்டுமல்ல, வெற்றிகரமானவையும்கூட! மோடியைப் போல் மத்தியிலும் ஒரு சிறந்த நிர்வாகி அமையவேண்டும்... அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும். நம் நாட்டை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நிர்வாகி யார்!?)