சனி, 12 நவம்பர், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி? விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது எனவும், அதுதொடர்பான விசாரணைக்கு தமிழக உத்தரவிடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசியல் போட்டி மற்றும் பணம் கொள்ளயைடிக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக பொதுமக்களின் வரிப் பணம் தேவையின்றி வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது திட்ட மதிப்பீட்டைத் தாண்டி ரூ. 230 கோடிக்கும் மேல் விழுங்கிவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூலகக் கட்டடம் 8 ஏக்கர் நிலப் பரப்பில், 3.75 லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டடங்கள் அமைந்துள்ளன.
சென்னையில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்ட அதிகபட்சமாக சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அரசு ஒப்பந்தப் புள்ளிகள் மூலம், மிகக் குறைந்த மதிப்பீட்டை குறிப்பிட்டுள்ள கட்டுமான நிறுவனத்தையே, நூலக கட்டடம் கட்ட நிர்ணயித்திருப்பர்.
சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதான் தேவைப்படும்.
மேலும் அரசு கட்டடம் என்பதால் திட்ட அனுமதி, குடிநீர் - கழிவுநீர் இணைப்புகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்புகளுக்கு அனுமதிபெற தனியாரைப்போல அதிக (லஞ்சமாக) பணச் செலவு கிடையாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனர்.
இதுபோல் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கும் அதிக அளவில் செலவிடப்படவில்லை. இந்த நிலையில், நூலகத்துக்காக ரூ. 230 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்படுவது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நூலகத்தில் இப்போது 5 லட்சம் நூல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு இலவசமாக நூலகத்துக்கு அளிக்கப்பட்டவை.
எனவே, ஒரு லட்சம் புத்தகங்களை மட்டுமே அரசு விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். இதிலும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பதிப்பாளர்களிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்கும் மேல் செலவாகாது. 
இதனுடன் வெளிநாட்டு புத்தகங்களை ரூ. 5 கோடிக்கு வாங்கியிருப்பார்கள் என்று கணக்கிட்டாலும், ஒட்டுமொத்தமாக புத்தகத்துக்கென ரூ. 10 கோடிதான் செலவாகியிருக்கும். 
எனவே, கட்டுமானம், நூல்கள் வாங்கியது மற்றும் பிற செலவுகள் என அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பே கிடையாது. அப்படியென்றால் மீதமுள்ள பல கோடிகள் எங்கு போனது?
மேலும் நூலக கட்டுமானப் பணியை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால், 6 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது திறப்புவிழா நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் கூட, கட்டுமானப் பணிகள் முடியவில்லை. நூலக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறவில்லை.

யாருக்கு பயன்?  
 
தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் கூட போக்குவரத்து நெரிசல் காரணமாக கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்துக்குச் செல்ல தயக்கம் காட்டுவர். பின்னர் யாருக்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது?
பிரபல கன்னிமாரா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தேவநேய பாவாணர் நூலகம் என பல்வேறு அரிய நூலகங்களைக் கொண்ட ஏராளமான நூலகங்கள் சென்னையில் உள்ள நிலையில், புதிதாக பல கோடி செலவில் நூலகம் ஒன்று தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன?
அரசியல் போட்டியும், பண மோசடியும் மட்டுமே இதன் முக்கிய நோக்கமாக இருக்க முடியும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
இதற்கு செலவிடப்பட்ட தொகையை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் ரூ. 5 கோடி வீதம் பிரித்தளித்து, அந்தந்த மாவட்ட நூலங்களை தரம் உயர்த்தியிருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் அனைத்து பகுதி மக்களும் பயன் பெற்றிருக்க முடியும்.
மாறாக இந்த நூலகத்துக்காக சென்னை நூலக நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
எனவே, அண்ணா பெயரில் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்தை அரசு கண்டறிய வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக