வெள்ளி, 8 மே, 2009

மீண்டும் காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

மீண்டும் காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?
பி.ராமநாதன்சமூக ஆர்வலர்
திருமலையப்பபுரம்பொட்டல்புதூர்திருநெல்வேலி மாவட்டம்
------------------------------------------------------------------------------------

வணக்கம்!
எனது நாடாளுமன்றத் தொகுதியான திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் நாட்டு நலன் கருதி காங்கிரசை எதிர்த்து ஒரு சுயேச்சை வேட்பாளராக நான் போட்டியிட நினைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அது இயலாமல் போய்விட்டது. ஆயினும் தேர்தலில் நான் சொல்ல நினைத்த விஷயங்களை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

காந்தியடிகளுக்கும் தமிழர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தனது பொது வாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய போது அவருக்கு உறுதுணையாக நின்றவர்கள் தமிழர்கள்தான் அவர் தனது சுயசரிதையில் மறக்கமுடியாத பெண்மணியாக கண்ணீருடன் நினைவுகூர்வது தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சியைத்தான். காந்தியடிகளை அரை நிர்வாண பக்கிரி என்று இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிடும் விதத்தில் காந்தியடிகளின் ஆடையில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்ததும் தமிழ்நாடுதான். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் படுகொலையை பலமாக எதிர்த்து இருப்பார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரசைக் கலைத்து விடுங்கள் என்றுதான் காந்தியடிகள் கூறினார். ஆனால் அதை காங்கிரஸ்காரர்கள் கேட்காமல் அவருக்கு துரோகம் செய்து விட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததை காங்கிரஸ்காரர்கள் கோலாகலத்துடன் கொண்டாடியபோது, காந்தியடிகள் மட்டும் அவர்களோடு கலந்துகொள்ளாமல் அவர்களை விட்டு வெகுதூரம் விலகிப் போய் தனிமையில் இருந்தார். தமிழ்நாட்டைவிட கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் எல்லாம் கூட காங்கிரசை கைகழுவி விட்டன. ஆனால், கல்வி அறிவில் அந்த மாநிலங்களைவிட முன்னேறிய தமிழகம் மட்டும் காங்கிரசை கைகழுவுவதில் மிகவும் பின் தங்கியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.
காந்தியடிகள் நமது மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர் மட்டுமல்ல, ஒருவகையில் நமது நெருங்கிய உறவினரும்கூட! ஆம். அவர் தமிழகத்தில் தமிழரோடு சம்பந்தம் செய்து இருக்கிறார். நமது சம்பந்தி காந்தியடிகளின் விருப்பத்தை நமது முன்னோர்தான் நிறைவேற்றவில்லை... தமிழகத்தில் காங்கிரசைத் தோற்கடிப்பதன் மூலம் ''காங்கிரசை கலைத்து விடுங்கள்'' என்ற அவர் விருப்பத்தைநாமாவது நிறைவேற்றுவோம்.

1) பொதுமக்களுக்குத் துரோகம்

ஆட்சியாளர்கள் ஒரு சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தை பொதுமக்கள் எவ்வாறு மதிக்க வேண்டும்; கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அவ்வாறே தாங்களும் அச்சட்டத்தை மதிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு தங்களால் கடைப்பிடிக்க முடியாமல் தாங்களே அதை மீறுபவர்களாக இருந்தால், அந்தச் சட்டத்தையே இயற்றக்கூடாது. அதனை பொதுமக்கள்மீது திணிக்கக்கூடாது. இதுதான் நியாயம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்தான் வருமான வரிச் சட்டம். ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டினால் அந்தக் கூடுதல் வருமானத்துக்கு வருமான வரி கட்ட வேண்டும். தங்கள் வருமானவரிக் கணக்கை ஒழுங்காகக் காட்ட வேண்டும். வருமான வரி கட்டாமல் ஏய்த்தால் சிறைத்தண்டனை - என்றெல்லாம் இந்தக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். ஆனால்,இந்தச் சட்டத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் இவர்கள் தாங்கள் அந்தச் சட்டப்படி நடந்து கொள்கிறார்களா?

சில மாதங்களுக்கு முன்னர் இடது சாரிக் கட்சிகள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, தங்கள் ஆட்சி கவிழ்ந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கிய விஷயம் இந்நாட்டினர் அனைவரும் அறிந்த பகிரங்கமான ரகசியம். அவ்வாறு விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்கு இவர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார்களே. அந்தப் பணம் எல்லாம் விலைக்கு வாங்கப்பட்டவர்களின் வருமானக் கணக்கில் காட்டப்பட்டதா? அந்த வருமானத்துக்கு எல்லாம் வருமான வரி கட்டப்பட்டதா?

அப்போது மட்டுமல்ல, இப்போதும்கூட நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சில அரசியல் கட்சிகளை - சில அரசியல் கட்சித் தலைவர்களை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செலவழித்துள்ளனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன்னைக் கூட்டணியில் இழுப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் பேரம் பேசப்பட்டதாகப் பகிரங்கமாகவே பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
இவ்வாறு இந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இருந்து பணம் பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தாங்கள் பெற்றபணத்தை வருமானத்தை கணக்கில் காட்டியிருக்கிறார்களா? அந்த வருமானத்துக்கு வரி கட்டியிருக்கிறார்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு 50 லட்சம்தான் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் 4.4.2009 அன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகத்திலிருந்து அதிக அளவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லிக்குச் சென்றால்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 7 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்... என்று பேசியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தேர்தல் கமிஷன் ஒரு வேட்பாளருக்கு நிர்ணயித்துள்ள தேர்தல் செலவு உச்சவரம்பான ரூ.50லட்சத்தையும் தாண்டி அதிகப்படியாக இவர்கள் செலவு செய்யவிருக்கும் 6.50 கோடி செலவுத்தொகை எந்தக் கணக்கில் வரப்போகிறது.
தாங்கள் அமல்படுத்தியுள்ள வருமான வரிச் சட்டத்தை தாங்களே மீறுகின்ற - வருமான வரி விஷயத்தில் இரட்டை அளவுகோல்களை கடைப்பிடிக்கின்ற - இந்த காங்கிரஸ் ஆட்சியாளரான யோக்கியர்களுக்கு சாதாரண குடிமக்கள் தங்கள் வருமானக் கணக்கை ஒழுங்காகக் காட்ட வேண்டும் என்று கூறுவதற்கு என்ன தகுதி யோக்கியதை இருக்கிறது?

சேவை செய்ய அனுப்பியவர்களுக்கே சேவை வரி (service tax)

எம்.ஜி.ஆர் நடித்த குலேபகாவலி படத்தில், வரிகளைப் பற்றிய ஒரு பாடல் உண்டு. அதில், இட்லி வரி, சட்னி வரி, பட்டினி வரி, தடுக்கி விழுந்தால்கூட வரி என்றெல்லாம் கேலியாக - வயிற்றெரிச்சலுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். ''ஏற்கெனவே நம் மீது வித்ஹிக்கப்பட்டுள்ள பலவிதமான வரிகளின் எண்ணிக்கையை இவர்கள் குறைப்பார்கள் - நமக்கு சேவை செய்வார்கள்'' என்று நம்பித்தான் பொதுமக்கள் இந்த காங்கிரஸ்காரர்களை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், இவர்களோ பழைய வரிகளின் எண்ணிக்கையைக் குறைக்காதது மட்டுமல்ல, தனக்கு வரம் அளித்த சிவபெருமானின் தலையிலேயே கைவைக்க முனைந்த பஸ்மாசுரன் போலத் தங்களை - சேவை செய்ய அனுப்பிய, ஆட்சியில் அமர்த்திய பொதுமக்கள் மீதே 'சேவை வரி' என்ற புதிய வரியையும் விதித்து விட்டார்கள். இந்த மாதிரி அதிமேதாவித்தனமன யோசனைகள் எல்லாம் சிதம்பத்துக்கு மட்டுமே தோன்றும். இவரது குணாதிசயம் தெரிந்துதான் கருணாநிதி இவரை அன்றே, ' சிவகங்கை சின்னப்பையன்" என்று கூறியிருக்கிறார் போலும்!

இந்த காங்கிரஸ்காரர்களை மீண்டும் தேர்ந்தெடுத்தால், ''தேர்ந்தெடுத்ததற்கான வரி" என்று புதிய வரி ஒன்றையும் பொதுமக்கள் மீது விதித்து விடுவார்கள். வேலியில் போகிற ஓணானை மீண்டும் நம் காதில் விட்டுக்கொள்ள வேண்டுமா? பொதுமக்களுக்கு இந்த வீண் வம்பு தேவைதானா?

2) காமராசருக்கு காங்கிரஸ்காரர்களின் துரோகம்

காமராசர் தன் சொந்த ஊரான விருதுநகரில் 1967 தேர்தலில் தோற்றுப்போன பின்னர், அவரைத் தங்கள் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வைத்ததன் மூலம் அவருக்கு மீண்டும் அரசியல் அந்தஸ்து அளித்தவர்கள் கன்னியாகுமரிக்காரர்கள். அவரை மிகுந்த பாசத்துடன் 'அப்பச்சி' என்று அழைத்து மகிழ்பவர்கள் அவர்கள். இந்த காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையிலேயே காமராசர்மீது பற்றும் மரியாதையும் இருக்குமேயானால், அந்த கன்னியாகுமரிக்காரர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை அகல ரயில் பாதை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லையே!

விருதுநகர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையிலேயே காமராசர் மீது பற்றும் மரியாதையும் இருக்குமேயானால், இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இவர் பிறந்த ஊரான விருதுநகரில் இருந்து இவர் ஆட்சி செய்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள தமிழகத்தின் தலைநகரான சென்னை வரையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விட்டிருக்கலாம். திலகர் பெயரில் ரயில் இருப்பதைப் போல, காமராசர் பெயரில் இந்த ரயில் இவரது பெயரை அன்றாடம் சென்னை வரை நினைவுபடுத்துவதோடு, இவருக்கு ஒரு சிறந்த 'நடமாடும் நினைவுச் சின்னம்" ஆகவும் திகழ்ந்திருக்கும்.

இவ்வாறு செய்திருந்தால், காமராசர் தினந்தோறும் மக்களால் நினைக்கப்பட்டிருப்பார். விருதுநகரிலிருந்தே சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதால், விருதுநகர் மக்களும் மிகவும் பயன் அடைந்திருப்பார்கள். விருதுநகருக்குத் தெற்கேயிருந்து சென்னை செல்லும் ரயில்களிலும் இடநெருக்கடி குறையும்.

மதுரையில் மு.க.அழகிரி போட்டியிடும் நிலையில் ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், 'மதுரையிலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்திருக்கும்போது, ஐ.மு.கூட்டணிக்கே தலைமை தாங்குகின்ற காங்கிரஸ் கட்சி காமராசர் பிறந்த விருதுநகர் உட்பட தமிழகத்தின் 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சென்னை-கன்னியாகுமரி இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்படும், விருதுநகர்- சென்னை எக்ஸ்பிரச் ரயில் விடப்படும் என்று அறிவித்திருக்க வேண்டாமா? இல்லையே!

கன்னியாகுமரி - சென்னை இரட்டை அகல ரயில் பாதை வெறும் இருப்புப்பாதை பிரச்சினை மட்டுமல்ல; விருதுநகர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பிரச்சினை வெறும் பயணிகள் பிரச்சினை மட்டுமல்ல; இவை இரண்டும் காமராசரின் கௌரவம் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் நான் கன்னியாகுமரிக்காரனாகவோ விருதுநகர்க்காரனாகவோ இல்லாவிட்டாலும், காங்கிரஸ்காரனாகவோ இல்லாவிட்டாலும்கூட காமராசர் மீது உண்மையான பற்றும் மரியாதையும் கொண்டிருப்பதால், இதற்காகக் குரல் கொடுக்கிறேன். 'தமிழகத்தில் மீண்டும் காமராசர் ஆட்சி அமைப்போம்' என்று தமிழக காங்கிரஸ்காரர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், உண்மையில் இவர்களுக்கு காமராசர் மீது பற்றும் மரியாதையும் கிடையாது. இவர்கள் காமராசருக்கு துரோகம் செய்கிறார்கள்.

3) நெல்லை எழுச்சிக்கு காங்கிரஸ்காரர்களின் துரோகம்

வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். அந்தளவு 13.3.1908 அன்று நெல்லையில் மாபெரும் மக்கள் புரட்சி நடைபெற்றது. அது நெல்லை எழுச்சி என்று வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புரட்சி.

ஆனால், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்த அப்போதைய நெல்லை நகராட்சி, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் புரட்சியை கலகம் என்று கூறி, அதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. இது நடந்து நூறாண்டு காலம் வரையிலும் - இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் கடந்த பின்னும் - நெல்லை எழுச்சியை கொச்சைப்படுத்திய அந்தத் தீர்மானத்தை திருத்த முற்படவேயில்லை.

இந்த நிலையில்தான், நெல்லை எழுச்சியின் நூற்றாண்டை முன்னிட்டு 13.3.2008இல் நெல்லையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆழ்வார்குறிச்சி திரு.எஸ்.பாலசுந்தரம் அவர்கள்(சுங்க இலாகா அதிகாரி, மும்பை -பணி நிறைவு) தலைமையில் டாக்டர் திரு. எஸ்.சண்முகம் அவர்கள் (நெல்லைச்சீமை மேம்பாட்டு அமைப்பு) வழக்கறிஞர் திரு.மங்களா எஸ். ஜவஹர்லால் அவர்கள், பேராசிரியர் திரு.வே.மாணிக்கம் அவர்கள், சிவராமபேட்டை, திரு.இரா.வேலு அவர்கள்(கூடுதல் இயக்குனர், நகராட்சிகள் நிர்வாகம், பணி நிறைவு) வரலாற்று ஆய்வாளர் திரு.செ.திவான் அவர்கள் ஆகியோர் 'நெல்லை எழுச்சி'யைப் பற்றிப் பேசினர்.இவ்விழாவில் நெல்லை நகராட்சியின் பழைய தீர்மானத்தை ரத்து செய்து நெல்லை எழுச்சியைப் பாராட்டி நெல்லை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று நான் கொண்டு வந்த தீர்மானம் பலத்த ஆதரவுடன் நிறைவேறியது. அத்துடன் நெல்லை மாநகராட்சி மேயரின் இல்லத்துக்கு நான் நேரில் சென்று அவரிடம் இதுபற்றி ஒரு மனுவும் கொடுத்தேன். நாங்கள் தீர்மானம் போட்ட பிறகு, இதன் தொடர்ச்சியாக - இன்னும் சில அமைப்புகளும் தீர்மானம் நிறைவேற்றின. பின்னர் நெல்லை மாநகராட்சியும் நெல்லை நகராட்சியின் பழைய தீர்மானத்தை ரத்து செய்து நெல்லை எழுச்சியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இதன் மூலம் நெல்லை எழுச்சிக்கு ஏற்பட்டிருந்த நூறாண்டு காலக் களங்கம் துடைக்கப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு நீண்ட காலம் வரையில் காங்கிரஸ்காரர்கள் வசம் நெல்லை நகராட்சி இருந்த போதிலும், 'நெல்லை எழுச்சியை' சிறுமைப்படுத்திய பழைய தீர்மானத்தை ரத்து செய்வதற்கு எந்த முயற்சியையுமே காங்கிரஸ்காரர்கள் மேற்கொள்ளவில்லை.

4) காங்கிரஸ் கட்சியின் தேசத் துரோகம்

'உன் நண்பனைச் சொல்; உன்னைச் சொல்கிறேன்" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒருவனின் நண்பன் யார் என்பதை வைத்தே அவனைப் பற்றி மதிப்பீடு செய்துகொள்ளலாம்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக்குடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. இந்த முஸ்லிம் லீக் பற்றி இன்னொரு முஸ்லிம் அமைப்பான மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், கேரளத்தில் முக்கியப் பிரமுகருமான அப்துல் நாசர் மதானி திருவனந்தபுரத்தில் 29-03-2009 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியை மாத்ருபூமி, மலையாள மனோரமா, கேரள கௌமுதி, தேஜஸ் ஆகிய மலையாள நாளிதழ்கள் விரிவாகப் பிரசுரித்துள்ளன. அந்தப் பேட்டியின் சுருக்கம் இதோ...
'' முஸ்லிம் லீம் ஒரு மதவாதக் கட்சி. அந்தக் கட்சிதான் 1945, 1946 காலகட்டங்களில் பாகிஸ்தான் பிரிவினையில் முக்கியப் பங்கு வகித்தது. அன்றைய கால கட்டம் முதல் இன்றைய காலகட்டம் வரை, மதவாதத்தையே தனது ஆயுதமாக அது பயன்படுத்தி வருகிறது. முஸ்லிம் லீக்கின் பெயர், கொடி, சின்னம் ஆகிய அனைத்தும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. பாகிஸ்தான் கொடிக்கும் முஸ்லிம் லீக் கொடிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு முஸ்லிம் லீக் கொடியை ஏற்றிய போது, கேரளத்தில் முஸ்லிம் லீக் ஆட்சியில் பங்கேற்றிருந்தது.

1972 முதல் 2003 வரை கேரளத்தில் நடந்த மதக் கலவரங்களின் போதெல்லாம், முஸ்லிம் லீக்தான் கேரள ஆட்சியில் பங்குவகித்திருந்தது. எனவே முஸ்லிம் லீக் ஆட்சியில் பங்கு வகித்தால் மீண்டும் மதக் கலவரம் ஏற்படும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் லீக் கேரள ஆட்சியில் பங்கு வகித்திருந்தால், கேரளம் தீயால் கொளுத்தப்பட்டிருக்கும். முஸ்லிம் லீக்கினர் கொளுத்தியிருப்பார்கள். முஸ்லிம் லீக்கால் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை"

- அப்துல் நாசர் மதானியின் பேட்டியைப் படித்தீர்கள் அல்லவா?இந்தியத் தேசியக் கொடியை கவனக்குறைவின் காரணமாகக் கூட தலைகீழாகப் பறக்கவிட்டால் அது குற்றம். இந்நிலையில், இந்திய விமானநிலையத்தின் மீது பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக் கொடியைக் கீழே இறக்கிவிட்டு, அந்த இடத்தில் முஸ்லிம் லீக் கொடியைப் பறக்கவிடுவது எவ்வளவு பெரிய தேசத்துரோகம்? இந்தியாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் பாகிஸ்தான் சென்று, ''இந்தியாவில் எங்களுக்கும், பாகிஸ்தான் கொடியையே தங்கள் கொடியாகக் கொண்டுள்ள முஸ்லிம் லீக்குக்கும் கூட்டணி உறவு உள்ளது. எங்களுக்குள் மிகுந்த நெருக்கம் உள்ளது. தேர்தல் சமயங்களில் வாகனங்களில் காங்கிரஸ் கொடியுடன் கூடவே முஸ்லிம் லீக் கொடியும் சேர்ந்து பறக்கும். அதனால் கராச்சி விமான நிலையத்தில் பறந்துகொண்டிருக்கும் பாகிஸ்தான் கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ் கட்சிக் கொடியைப் பறக்கவிடுகிறோம்..." என்று சொல்வார்களா? அவ்வாறு சொல்லத்தான் முடியுமா? அல்லது இந்தியன் ஒருவன் பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, அந்தக் கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை பறக்கவைக்க முடியுமா? இதைக் கற்பனைதான் செய்து பார்க்க முடியுமா?

இந்திய மண்ணில் இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு, பாகிஸ்தான் கொடியையே தன் கொடியாகக் கொண்டிருக்கும் முச்லிம் லீக்கின் கொடியைப் பறக்கவிடும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்தது எப்படி? அவர்களுக்கு அந்த தைரியத்தை அளித்தது யார்? இந்தியாவில் இந்திய தேசியக் கொடி இறக்கப்பட்டு, முஸ்லிம் லீக் கொடி பறக்கவிடப்பட்டபோது, இந்திய இறையாண்மை எங்கே போயிற்று? இந்திய அரசியல் சட்டம் என்ன செய்து கொண்டிருந்தது?

இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு, பாகிஸ்தான் கொடியையே தாங்கள் ஏற்றுவதாக நினைத்து, தங்கள் கட்சிக் கொடியையே ஏற்றிய இந்த கேரள முஸ்லிம் லீக்கினர் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் கேரள சட்டமன்றங்களிலும், இந்திய நாடாளுமன்றங்களிலும் பங்கு பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி கேரளத்தில் அவர்களோடு கூட்டணி போட்டு, கைகோத்துள்ளது. இந்திய தேசியக் கொடியை இறக்கிவிட்டு, பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றியவர்கள் குற்றவாளிகள் என்றால், இந்தக் குற்றவாளிகளுடன் கூட்டு வைத்துள்ள காங்கிரஸ்காரர்களும் குற்றவாளிகள்தானே!

5) இலங்கைப் பிரச்னையும் காங்கிரஸ் நிலையும்

இன்று இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் படும் இன்னல்களைக் கண்டு நம் கண்கள் ரத்தக் கண்ணீரை வடிக்கின்றன.

விதியே! விதியே! தமிழ்ச்சாதியையென்செயக் கருதியிருக்கின்றாயடா..." என்று பாரதி குமுறியதுபோல்தான் நாமும் குமுறுகிறோம்.

இலங்கைத் தமிழர் விஷயத்தில் தங்கள் சகோதரர்கள் இலங்கையில் அழிக்கப்படுகிறார்களே என்று துடிதுடித்துப் போய் - ரத்த பாசத்துடன் - தமிழ்நாட்டில் யாராவது பேசிவிட்டால், இந்திய இறையாண்மை என்ற பெயரில் அவர்களைக் கடித்துக் குதறுபவர்கள், கேரளத்தில் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுபவர்களிடம் வாலைக் குழைத்துக் கொண்டு மண்டியிட்டுக் கிடக்கிறார்களே... எப்படி? அப்பட்டமான தேசத்துரோகிகளுக்கு துணைபோகும் இந்த காங்கிரஸ்காரர்களை என்னவென அழைப்பது ?

பின்னுரை

ஒரு சமூகக் கடமையாகக் கருதியே மிகுந்த துணிச்சலுடன் இந்த விஷயத்தை நான் வெளியிட்டுள்ளேன். இதை பிரசுரமாக சொந்த செலவில் வெளியிட்டுள்ளேன்.

வாழ்த்துகளுக்கும்
வசைமாரிகளுக்கும்
பாராட்டுகளுக்கும்
பயமுறுத்தல்களுக்கும்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
பி.ராமநாதன், திருமலையப்பபுரம்,
பொட்டல்புதூர் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம் 627 423

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக